இஸ்லாமிய வரலாற்றில் இளம் வீரர்களின் தியாகங்கள்...




வாலிபப் பருவம் அபார சக்திகளைக் கொண்ட வீரதீரமிக்கதொரு பருவம். உருவாக்கங்களைச் செய்கின்ற பருவம். எமது முன் சென்ற நல்லடியார்களான இளைஞர்கள் தஃவாக் களத்திலும், தியாகத்திலும், அறிவிலும், போராட்டத்திலும் சிறந்த முன்மாதிரிகளை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அத் துiறைகளில் அவர்கள் சாதனைகள் படைக்கின்ற போது இருபது வயதைக் கூட அடைந்திருக்கவில்லை.

மக்காவில் தாம் ஏற்றுக் கொண்ட இஸ்லாமியக் கொள்கைக்காக தண்டனைகளையும் துன்பங்களையும் அனுபவித்த இவர்கள், அப்போது வளர்ந்து வரும் பருவ வயதை உடைய இளைஞர்களாகவே இருந்தனர்.
முஸ்அப் இப்னு உமைர் (ரலி), ஸுபைர் அல் - அவ்வாம் (ரலி), தல்ஹது அல்-ஹைர் (ரலி), ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி), அலி இப்னு அபூதாலிப் (ரலி) போன்றவர்கள் அவ்விளைஞர்களில் சிலராகும். இவர்கள் அபூதாலிப் எனும் பள்ளத்தாக்கில் சிறைபிடிக்கப்படடிருந்த வேளை பசியும் தாகமும் இவர்களைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த வேளை தங்களது வயிற்றினை வரிந்து கட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பசியோடு இருந்தார்கள். இவர்கள் பசியின் கொடுமையால் சாப்பிடுவதற்கு எதுவுமின்றி இலைகுலைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களது வயது பதினைந்தைக் கூட தாண்டியிருக்கவில்லை.

யாஸீர் குடும்பத்தவர்கள், பிலால் இப்னு ரபாஃ (ரலி), ஹப்பாப் இப்னு அல்-அத்ர் (ரலி) போன்றோர்களும் எண்ணற்ற பல வேதனைகளை அனுபவித்தவர்கள். அதில் அவர்கள் பொறுமையோடு இருந்தார்கள். அத்தகைய வேதனைகள் யாவும் அவர்கள் எற்றுக் கொண்ட அவர்களது கொள்கையில், அவர்களது தீனில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

வாலிபப் பருவம் ஒரு பேராபத்தான ஒரு பருவம் எனச் சிலர் கூறுகின்றனர். அவர்களது இக்கூற்று பிழையானது என்பதற்கு மேற்குறிப்பிட்ட நிதர்சன நிகழ்வுகள் சான்றாய் உள்ளன. இஸ்லாமிய அகீதாவின் நிழலிலே கொடுக்கப்படுகின்ற பயிற்சிகள், இளைஞர்களை போராட்ட வீரர்களாகவும், ஏன்? உலகின் பல பாகங்களிலும் இஸ்லாத்தைப் பரப்புகின்ற இஸ்லாமிய படைகளை நடாத்திச் செலகின்ற தளபதிகளாகவும் அவர்களை மாற்றியிருக்கின்றன.

இன்று எமது இளைஞர்கள் விளையாட்டுக்காகவும், வீண்களியாட்டங்களுக்காகவும், பொழுது போக்குகளுக்காகவும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றானர். ஆனால் இஸ்லாமிய தஃவாவின் ஆரம்ப காலப்பொழுதில் இருந்த இளம் இளைஞர்கள் போரட்டங்களில் கலந்து கொண்டு தங்களது இன்னுயிர்களை இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக அர்பணித்து விடுவதற்காகப் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர்.
என் இஸ்லாமிய சகோதரனே! போராட்டங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதற்காக கண்ணீர் வடித்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அப்போது அவர்கள் பருவ வயதைக் கூட அடைந்திருக்கவில்லை?

இந்த சமூகத்தில் அவர்கள் சிறியவர்கள் என்ற காரணத்தால் இந்த சமூகம் தோற்கடிக்கபட்டடதா? எனவே, இந்த சமூகத்தின் வளர்ந்தவர்களான உங்கள் நிலை யாது?

முஆத் இப்னு அல் ஹாரிஸ் (ரலி) அவரது சகோதரர் முஅவ்வத் (ரலி) ஆகிய இருவரும் மண் விளையாடும்  சிறுபருவம். இவர்கள் அன்ஸாரி இளைஞர்கள். இவர்கள் மிகப் பெரும் பத்ர் யுத்தத்தில் கலந்து கொணடவர்கள். இரு இளைஞர்களும் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் இப்னு அவ்ப் (ரலி) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை நீங்கள் அறிவீர்களா? அவன் தூதர் (ஸல்) அவர்களை துன்புறுத்துவதாக நாம் அறிகிறோம். அவனை எமக்குக் காட்டித் தாருங்கள் என்றார்கள். அவர் அவர்களுக்கு அவனை காட்டிக் கொடுத்தார். பின் யுத்தம் உச்சகட்டத்தை அடைகின்ற போது அவ்விரு இளைஞர்களும் அந்த அல்லாஹ்வின் விரோதியின் மீது பாய்கின்றார்கள். அவன் அப்படியே கீழே சாய்ந்து விடுகின்றான். உடன் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனை தீர்த்துக் கட்டிவிடுகின்றார்கள். இவ்விரு இளவயது இளைஞர்களினுடைய இவ் உயர்ந்த துணிவு, அப்போது இருந்த இணைவைப்பாளர்களது படைத்தளபதியை விடவும் அவர்களது துணிவை விடவும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

உஹத் யுத்தத்தின் போது சிறுவயது என்ற காரணத்தினால் ரஸுல் (ஸல்) அவர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்காது திருப்பி அனுப்பியவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் தான் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள். இவர் உஹத் யுத்தத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார். ஹந்தக் யுத்தத்தில் கலந்து கொள்வதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

அப்போது அவருக்கு வயது பதினைந்து அவ்வாறே உஸாமா பின் ஸைத் (ரலி), இப்னு ஸாபித் (ரலி), அல் பர்ராஃ இப்னு ஆதிப் (ரலி) போன்றோரும் உஹத் களத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு ஹந்தக் யுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்னும் ஸம்ரத் இப்னு ஹுதைஜ் (ரலி) போன்றோரும் அந்நாளில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அப்போது அவர்களது வயது பதினைந்து. அல்லாஹ்வின் தூதரே! ராபிஃ குறிவைத்து வேகமாக எறியக் கூடியவர் என்று கூறப்பட்டதும் உடன் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின் ஸம்ரத், ராபிஃ இப்னு ஹுதைஜை விட வேகமானவர் அல்லாஹ்வின் தூதரே! ஏன்று கூறப்பட்டதும் அவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இத்தகைய இளவயதையுடைய வீரர்களின் தியாக வரலாறுகள் முடிவற்றது. அவர்களில் மற்றும் ஒருவர் தான் உமைர் இப்னு அபீவக்காஸ். இவர் ஸஃத் இப்னு அபீ வக்காஸுடைய சகோதரர். ஸஃது (ரலி) அவர்கள் உமைர் (ரலி) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.

தூதர் (ஸல்) அவர்கள் உமைர் (ரலி) அவர்களைக் கண்டு பத்ர் யுத்தத்தில் கலந்து கொள்வதைத் தடுக்காமல் இருப்தற்காக ஏனையவர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட நான் என் அருமைச் சகோதரனே! நீ ஏன் இவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றாய்? எனக் கேட்டேன். அப்போது தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டால் நான் சிறியவன் எனக் கூறி என்னை யுத்தகளத்துக்கு போராட வராமல் தடுத்து விடுவாரோ! என நான் பயப்படுகின்றேன். ஆனால் நானோ யுத்தத்தில் கலந்து கொண்டு அல்லாஹ் எனக்கு ஷஹாதத் (வீர மரணத்தை) தர வேண்டும் என விரும்புகின்றேன் என்றார்.

உண்மையில் அவரை ரஸூல் (ஸல்) அவர்கள் போராட்டத்திற்கு அனுமதியளிக்கவில்லை. திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்போது அழுதார்கள். அதனைக் கண்ட ரஸூல் (ஸல்) அவர்கள் மறுபடியும் அனுமதி வழங்கினார்கள். அவர் சிறியவர் என்பதனால் அவருக்காக அவரது வாள் உறையை நான் சுமந்துகொண்டிருந்தேன். அவர் தனது பதினாறு வயதினிலேயே பத்ர் யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். குறைஷியர்களின் படையில் இருந்த அம்ர் இப்னு வுத் என்பவன் தான் அவரைக் கொலை செய்தான். இந்த சிறியவர்களுக்கு முன்னால் இன்றைய இளைஞர்கள் என்ன கூறுகின்றார்கள்? இன்றைய பாடசாலைப் பருவத்தை உடையவர்களாக அன்று அவர்கள் இருந்தனர்.

இதோ இவர் ஹன்ழலா (ரலி) அவர்கள், இவரைப் பற்றி இன்றைய இளைஞர்கள் என்ன கூறுகின்றார்கள்? திருமண இரவன்று தன் மனைவியுடன் இருந்த அவர் போராட்டத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே மனைவியை உதறித்தள்ளி விட்டு அதற்கு விடையளிக்கின்றார்கள். அந்த உஹத் யுத்தத்தில் அவர் ஷஹீதாக்கப்படுகின்றார்கள். பின்பு தூதர் (ஸல்) அவர்கள் கூடி இருந்த ஸஹாபாக்களைப் பார்த்து உங்களது தோழர் ஹன்ழலாவை மலக்குகள் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவரைப் பற்றி  அவரது மனைவியிடம்  வினவப்பட்ட போது, யுத்தத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டதை கேட்ட உடனேயே குளிப்பு கடமையாகி இருக்கும் நிலையிலேயே அவர் யுத்த களத்தை நோக்கிச் சென்றார் என விடையளித்தார். இதனால் தான் மலக்குகள் குளிப்பாட்டினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் என்பவர் அறிவித்தார்.
இது தான் ரஸுல் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு கொடுத்த பயிற்சி, எமக்கும் தேவைப்படுகின்ற நாம் முயற்சி செய்ய வேண்டிய பயிற்சியும், முன்மாதிரியும் இது தான். இதனோடு மட்டும் ரஸுல் (ஸல்) அவர்கள் கொடுத்த பயிற்சியின் முடிவுகள் நின்று விடவில்லை. அபரிதமான சிறந்த தகுதிவாய்ந்த போர்த் தளபதிகளையும் உருவாக்கியது. அவர்கள் இஸ்லாத்தின் விரோதிகளுடன் போராடக் கூடிய படைகளை நடாத்திச் சென்றனர். அலி இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள், உஸாமா இப்னு ஸைத் (ரலி) போன்றோர் அத்தகையவர்களில் இருவராகும். அதே போக்கில், அதே வழியில் சென்றவர்களில் ஒருவர் தான் பின்வந்த முஹம்மத் பின் அல் காஸிம் அஸ் ஸகபீ என்பவரும்.

அலி (ரலி) அவர்கள் துணிச்சல் மிக்க ஒரு போர் வீரராகக் காணப்பட்டார். அதிகமான போரட்டங்களின் போது இஸ்லாமியப் படையின் கொடி அவரது கையில் தான் இருந்தது. பத்ர் யுத்தத்தின் போதும் கொடியை ரஸுல் (ஸல்) அவர்கள் அவரது கையில் தான் கொடுத்தார். அப்போது அவருக்கு வயது இருபது. ஹைபர் யுத்தத்தின் போது அவரே கொடியைச் சுமந்திருந்தார்.
இளம் வாலிபத் தளபதிகளில் ஒருவர் தான் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள். ரஸுல் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது உஸாமா (ரலி) வுக்கு வயது இருபது. அப்போது அவருக்கு பதினெட்டு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ரஸுல் (ஸல்) அவர்கள் உஸாமாவை ஒரு பெரும் படைக்கு அமீராக நியமிக்கின்றார்கள். ஆனால் அப்படை புறப்படு முன்பே ரஸுல் (ஸல்) அவர்கள் மரணித்து விடுகின்றார்கள். எனவே உடன் அபுபக்கர் (ரலி) அவர்கள் ஷாம் தேசத்தில் உரோமர்களுடன் போராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்படையை உஸாமாவின் தலைமையின் கீழ் அனுப்பி வைக்கின்றார்கள். அதில் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களும் இருக்கின்றார்கள். அவர் உஸாமாவை சந்திக்கும் பொழுதெல்லாம் அமீர் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்! நீங்கள் எனக்கு அமீராக இருக்கும் நிலையில் ரஸுல் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறாமல் சந்திப்பது கிடையாது. அப்படை ஷாம் தேசத்தை அடைந்த போது ஒரு பெரும் மேகக் கூட்டம் அவர்களை அப்படியே மறைத்தக் கொள்கின்றது. இது எதிரிகளின் கண்களில் படாமல் அவர்களது பாதுகாப்பு அரண்களை உடைத்து அவர்களைத் தாக்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது என உர்வத் இப்னு அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

இளம் வயதுடைய படைத்தளபதிகளில் ஒருவரே முஹம்மத் இப்னு அல் காஸிம் அஸ் ஸகபீ. கலீபா ஹஜ்ஜாஜ் சிந்தை (தற்போதைய பாகிஸ்தான்) வெற்றி கொள்வதற்காக இவரது தலைமையில் ஒரு படையை திரட்டி அனுப்புகின்றார்கள். அங்குள்ள அரசர்களையெல்லாம் வெற்றி கொண்டு, ஏராளமாக கனீமத் (யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட) பொருட்களுடன் படையைத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து சேர்கின்றார்கள் தளபதி முஹம்மது இப்னு அல் காஸிம் அவர்கள்.

முன்சென்ற நல்லடியார்களான இளம் இளைஞர்களின் போராட்டக் களத்தில் சாதனைகள் படைத்தது போல, அறிவியல் துறையிலும் சாதனைகளைப் படைத்துள்ளார்கள். இவர்கள் அறிவின் தேர்ச்சியில் உச்சகட்டத்தை அடைந்திருந்தனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற நபித்தோழர்களில் ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

அல் குர்ஆனுக்கு விளக்கமளிப்பதில் சிறந்து விளங்கிய ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நபித்தோழர்கள் அவரை அல் ஹப்ரு (அறிஞர்) என்ற பெயர் கொண்டு அழைத்தனர். அவர் நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைத் தேடிப்பிடிக்கக் கூடியவராகக் காணப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவரது வயது பதிமூன்று, அவர் தன்னைப் பற்றி ஒரு முறை இவ்வாறு கூறியுள்ளார். எங்கேனும் ஒரு மனிதரிடத்தில் தூதர் (ஸல்) அவர்களது ஒரு ஹதீஸ் இருக்கும் செய்தி எனக்குக் கிடைத்து விட்டால் உடனே அவரைத் தேடி அவரது இடத்திற்குச் செல்வேன். அவர் வரும் வரைக்கும் அவரது வீட்டு வாசலில் எனது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்துக் கொள்வேன். வீசுகின்ற காற்று மண்ணை வாரி என் மீது இறைத்து விடும். அவர் வெளியே வந்து (நான் இருக்கும் நிலையில்) என்னைக் காண்பார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களது சிறிய தந்தையின் மகனே! நீங்கள் எதற்காக இஙகு வந்தீர்கள்? நீங்கள் எனக்குத் தூது அனுப்பி இருக்கக் கூடாதா? நான் உங்களிடம் வந்திருப்பேனே! எனக் கூறுவார். அதற்கு இல்லை! நான் தான் உங்களிடம் வரவேண்டும் என்று கூறி அவரிடம் ஹதீஸைக் கேட்பேன் என்கிறார்கள், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.

இவர் தப்ஸீர் கலையிலும், அல்குர்ஆனிலும், அதனுடன் தொடர்புள்ள இதர கலைகளிலும், ஹதீஸிலும், கவிதையுடன் தொடர்புற்ற கலைகளிலும், அரபு மொழியிலும் மின்னும் தாரகையாகத் திகழ்ந்தார்கள்.
ஸைத் இப்னு ஸாபித் அல் அன்ஸாரி (ரலி) அவர்களும் அத்தகையவர்களுள் ஒருவர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும் போது அவரது வயது பதினொன்று. அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீபாவாக இருக்கும் போது அல்குர்ஆனை ஒன்று சேர்த்தவரும் இவரே.

நபித் தோழர்களுக்கு மத்தியில் இருந்த இளவயது அறிஞர் அம்ர் இப்னு ஹஸ்ம் அல்-ஹஸ்ரஜி (ரலி) என்பவர் பதினொரு வயதாக இருக்கும் போது நஜ்ரான் வாசிகளுக்கு மார்க்கத்தையும், அல்குர்ஆனையும் கற்றுக் கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் இவரைத் தான் தேர்ந்தெடுத்தார்கள்.
அவ்வாறே ருபைஅத் அர்-ரஃயீ (ரலி) என்பவர் வயதில் மிகச் சிறியவராக இருந்த போதிலும் அவர் மதீனாவின் முஹத்திஸாகவும், சட்டமேதையாகவும், இமாமாகவும் காணப்பட்டார். பிரபல்யமான நான்கு மத்ஹபுகளில் ஒரு மத்ஹபின் இமாமான மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களும் அவ்வாறே மற்றொரு மத்ஹதபின் இமாமான அபூ ஹனீபா அந்-நுஃமான் (ரஹ்) அவர்களும் மற்றும் ஸுப்யான் அத் தவ்வி (ரஹ்) அல் - அவ்ஸஈ (ரஹ்), அல் லைஸ் இப்னு ஸஃது போன்றோர் யாவரும் ருபைஅத் அர்-ரஃயீ (ரலி) அவர்களிடமிருந்து கல்வி பயின்றவர்கள்.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் தனது பதினாறாவது வயதிலேயே ஹதீஸ்களைத் தேடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் அனாதையாக வளர்ந்தார். அவரை அவரது தாய் பராமரித்து வந்தார். அவரது அறிவுத் திறமை பல பகுதிகளைலும் பிரபல்யமாகியது. அவர் தனது பதினைந்தாவது வயதிலேயே அறிவு தேட ஆரம்பித்தார் என்றும் கூறப்படுகின்றது. அவர் தனது இருபதாவது வயதிலேயே காலநடையாக வந்து தனது ஹஜ் கடமையை நிறைவேற்றினார். ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் போது அவரிடம் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அதில் அவரது புத்தகங்களே இருந்தன. தான் களைப்புறும் போது அப்பையை ஒரு கல்லின்; மீது வைத்து அதில் தனது தலையை வைத்து ஓய்வெடுப்பார்.

இந்த உம்மத்தின் மற்றுமோர் அறிஞர் தான் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள். அவரையும் அவரது தாயே வளர்த்தார். அவர் தனது பதினாறு வயதிலேயே பிரபல்யமான இஸ்லாமிய நூற்களைப் படிக்க ஆரம்பித்தார். ஸஹாபாக்கள், தாபியீன்கள் பற்றிய நூற்களையும் அவர்களது கருத்துக்கள் பொதிந்த நூற்களையும் அவர் தனது பதினெட்டாவது வயதில் எழுதினார். அவர் இரவில் நபி (ஸல்) அவர்களது மண்ணறைக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு நிலா ஒளியில் ஹத்யுஸ் ஸாரி முகத்திமது பத்ஹுல் பாரி எனும் வரலாற்று நூலை எழுதினார்.

இத்தகைய அறிஞர்கள் தாம் படித்த தமது ஆசிரியர்களுக்கு முன்னால் மிகவும் தாழ்மையுடனேயே நடந்து கொண்டார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவாகளிடம் சுன்னாவையும் வேறு சில அறிவுரைகளையும் கற்றுக் கொண்டார்கள். பின்பு அவர் எகிப்துக்கு வந்து அங்கு மரணமடைந்தார்கள். நான் முப்பது வருடங்களாக இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்காகப் பிரார்த்திக்காமல், அவருக்காக பாவமன்னிப்புக் கேட்காமல் நித்திரை செய்தது கிடையாது என இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். அவரது மகன் அப்துல்லாஹ்விடம் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மனிதராக இருந்தார் என்று கேட்கப்பட்ட போது, என் அருமை மகனே, ஷாபிஈ (ரஹ்) அவர்கள் உலகுக்கு ஒரு சூரியனாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருந்தார், பின் வந்தவர்களில் எவரும் இந்த இரண்டிற்கும் இருக்கின்றார்களா?, என்று கூறினார்கள்.

இமாம் ஸுப்யான் அத் தவ்ரி என்பவரும் தலைசிறந்த அறிஞர்களுல் ஒருவர். இவர் மக்காவில் இருக்கும் போது இமாம் அல் அவ்ஸாஈ அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வருகின்றார்கள் என்ற செய்தி இவருக்குக் கிடைக்கின்றது. உடனே அவரை வரவேற்பதற்காக மக்காவை விட்டும் வெளியே சென்று ஸாதவா என்னுமிடத்தில் இமாம் அல் அவ்ஸாஈயைச் சந்திக்கின்றார்கள். அங்கிருந்து அவர் வந்த ஒட்டகத்தின் கடிவாளத்தை இவர் கையில் பிடித்துக் கொண்டு ஷெய்குக்கு வழி விடுங்கள் எனக் கூறிக் கொண்டு மக்காவுக்கு அழைத்து வந்தாhகள். இந்த உம்மத்தில் அறிவைத் தேடுகின்ற இளைஞர்கள் அறிவிலும், ஒழுக்கத்திலும் இறையச்சத்திலும் இவ்வாறு தான் காணப்பட்டார்கள்.

எனது அன்பின் வாலிபச் சகோதரர்களே! இவர்கள் யாவரும் உங்களுக்குரிய முன்மாதிரிகள். முன்சென்ற சமூகத்தின் முன்னேற்றகரமான இளைஞர்கள், அவர்கள் வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கியிருந்த இளைஞர் பரம்பரையன்று.

நாம் இந்த உதாரணங்களை இன்றைய இளைஞர்களான உங்களுக்கு முன்னால் வைக்கின்றோம். ஏனெனில் அதில் உங்களுக்கு அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றன. அதனை முன்மாதிரியாகக் கொள்ளும் ஒவ்வொரு இளைஞனும் அவர்களைப் போன்று உயர்ந்த இடத்தை அல்லாஹ்வின் உதவியுடன் இன்றும் என்றும் அடையலாம். இன்னும் அல்லாஹ்வின் நிழலை, அன்று வேறு எந்த ஒரு நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுக்கின்ற ஏழு பிரிவினரில் ஒருவராக நீங்களும் ஆகலாம்.

இறுதியாக அல்லாஹ் விரும்புகின்ற அவன் பொருந்திக் கொண்ட விஷயங்களை அவன் எமக்கும் உங்களுக்கும் அருள்புரிவானாக. அகில உலக இரட்சகன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவாகள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்ட காலம் அவர்கள் மீது உருண்டு ஓடி விட்ட பொழுது, அவர்களின் இருதயங்கள் இறுகிப் போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர். (அல் குர்ஆன்-57:16).

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters