இந்த உலகிலே சராசரியான ஒரு மனிதன் பிறக்கிறான், வாழ்வாங்கி வாழுகின்றான், வாழ்ந்த பின் மரணிக்கின்றான். இவ்வாறான ஒரு மனிதனின் வாழ்க்கைச் சுற்றோட்டத்திலே அவன் சிறுபராயம், இளம்பராயம், முதுமைப்பராயம் எனும் மூன்று முக்கிய பருவங்களை சந்திக்கின்றான்.
இவற்றில் இளமைப்பருவம் சற்று வித்தியாசமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான பருவம் என எல்லோராலும் கருதப்படக்கூடிய நிலையாகும். இளைஞர்கள் சமுகத்தின் முதுகெலும்பு என முன்னோர்கள் மாத்திரமின்றி இன்னோர்களும் இளைஞர்களைப் பற்றி பேசிப் புகழுகிறார்கள். உண்மையும் அதுதான் ஒரு சமுகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இளைஞர்களின் கரத்திலே உள்ளது என்பதை வரலாறு கண்ட உண்மை. இதனால்தான் இளைஞர்களை உத்தியோகப்பற்றற்ற அரசாங்கம் என்று கூட வர்ணிக்கிறார்கள்.
ஏனெனில், இவர்களிடம் அதிகாரமோ பற்றாக்குறை ஆளுமைகளோ ஏறக்குறைய இத்தகைய ஆளுமை மிக்க இளைஞர்களுக்கு தங்களது ஆளுமைகளை தக்க வைக்க இஸ்லாம் வழிகாட்டுவதிலிருந்தும் பின்வாங்கவில்லை.
இன்றைக்கு இஸ்லாம் அசுர வேகத்தில் உலகமெங்கும் வியாபித்திருக்கின்றது என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் அன்றைய இஸ்லாமிய இளைஞர்களால் இஸ்லாத்திற்காக இடப்பட்ட வித்தேயன்றி வேறில்லை. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களை, இளைஞர்களை தங்களுடைய பயிற்சிப் பட்டறையில் புடம் போட்டு எடுத்ததன் விளைவு, கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதற்கும், இஸ்லாத்திற்காக தன் உயிரை துச்சமாக மதிப்பதற்கும் ஏன்? நபி (ஸல்) அவர்களின் காலில் ஒரு முள் தைப்பதைக் கூட விரும்பாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது பற்றுறுதியுடையவர்களாக அவர்களை மாற்றியது.
இவர்களின் வழிகாட்டலின் விளைவே உஸாமா பின் ஸைத் (றழி) என்ற இள வயது வாலிபத் தோழர் தனது 17 வயதினிலே தனது தலைமையில் ரோம் பிரதேசத்திற்கு படையெடுத்து வெற்றி கொண்டார். மேலும், செல்வச் சீமாட்டியின் மகனாகப் பிறந்த, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புது ஆடையை அணிய வசதியிருந்த முஸ்அப் இப்னு உமைர் (றழி) என்ற ஸஹாபி தன் இளவயதிலேயே உலக மோகங்களிலிருந்து விடுபட்டு, இஸ்லாத்தை ஏற்று, இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து, இஸ்லாத்திற்காகவே மரணித்த வரலாற்றை நாம் மறந்து விட முடியாது.
மட்டுமன்றி, நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதை அறிந்த குறைஷியர்கள் நபியவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டு ஆயத்தமான போது நபியவர்கள்; தன்வீட்டில் அலி (றழி) அவர்களை இருக்குமாறு கூறி விட்டு சென்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் இளம் துடிப்புள்ள அலி (றழி) அவர்கள் தயங்காமல், தளராமல் நபியவர்களின் கட்டளைக்கு முன்னால் தன் உயிரை துச்சமாக மதித்தாரே இவருடைய இஸ்லாத்தின் மீதுள்ள பற்றை என்னவென்று சொல்வது.
இவ்வாறு உஸமா பின் ஸைத்தைப் போல், முஸ்அப் இப்னு உமைரைப் போல், அலியைப் போல், அரசியல் முதல் அடுப்படி வரை இஸ்லாத்தை அச்சொட்டாக பின்பற்றுகின்ற இளைஞர்கள் இன்று உள்ளார்களா? என்றால் இப்பிரிவுக்குள் அடங்குபவர்கள் அரிதிலும் அரிதானவர்களே.
துரதிஷ்டவசமாக இன்றய இளைஞர்கள் நாகரீகம் என்ற கொடூரமான வியாதியினால் நலிவுற்று இருப்பதையும் ஆடம்பரம் என்ற அசுர பேயினால் ஆட்கொண்டு கண்மூடித்தனமான போக்கில் செல்வதையும் பார்க்கின்ற பொழுது உள்ளம் வேதனையால் வெடித்துக் குமுறுகின்றது. சமுகத்தின் தேவைகள் எத்தனையோ வேண்டிக் கிடக்க இளந் தோல்கள் சுமையிழந்து சிந்தனைச் செயலிழந்து முடங்கிப்போய் திரையரங்குகளிலும், வீடியோ காட்சிகளிலும், வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் வீண் பேச்சுகளிலும் காலத்தை வீணாக்கும் அவல நிலை மனதை உறுத்துகிறது. சில சில்லரை காசுகளுக்காகவும், தற்காலிக சுகண்டிகளுக்காகவும் தன்னுடைய தன்மானத்தையும், சுய மரியாதையையும் இழந்து, ஓளிமயமாக்க வேண்டிய எதிர் கால வாழ்க்கையை காரிருள் படிந்த கரியாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
இஸ்லாம் இளைஞர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கு வழிகாட்டியது ஒருகாலம் அவர்கள் இஸ்லாத்தை உணர்வது எக்காலத்திலோ?
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நாளை மறுமையில் மனிதர்களிடம் கேட்கப்படக்கூடிய கேள்விகளில் ஒன்றாக 'உன்னுடைய இளமை பருவத்தை எவ்வாறு கழித்தாய்?' என்று கேட்;கப்படும் என குறிப்பிட்டார்கள். தவிரவும், நாளை மறுமையில் அர்ஷூடைய நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள் மத்தியில் 'அல்லாஹ்வை வணங்குவதிலே திளைத்த இளைஞன்' என்ற இளைஞர் கூட்டத்தயும் நபியவர்கள் குறிப்பிடடுள்ளார்கள். இது இளமைப்பருவத்தின் முக்கியத்தவத்தையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
இளைஞர்கள் தங்களை தாங்களே மாற்றிக்கொள்ளாத வரை அவர்களை ஒருவராலும் மாற்ற முடியாது. இளைஞர்கள் முற்போக்காக சடவாத சிந்தனைகளை விட்டு விலகிச்செல்ல வேண்டும். எனவே, இன்றைய இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய சிந்தனைப் போக்கும், இஸ்லாமிய தாகமும் எழுச்சி பெற்று விழிப்புணர்;சி பெறுமாயின் நிச்சயமாக இஸ்லாமிய சமுகத்தின் விடியல் காலை கார்மேகங்கள் மத்தியில் கதிரவன் போன்று ஒளி வீசும் இஸ்லாமிய இளைஞர்களின் கையிலே என்பது திண்ணம்.
நன்றி : நூருல் மனார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக