இஸ்லாமிய யுவதி என்றால் யார்?


இஸ்லாம் பெண்களை இரு கண்களாக மதிக்கின்ற ஒரு மார்க்கம். இஸ்லாம் வருவதற்கு முன்னர் பெண் என்பவள் ஆணின் அடிமை, அவனின் சிற்றின்பப் பொருள், மனிதப் பிறவியாக கருதப்பட முடியாதவள், குடும்பத்தின் அவமானச் சின்னம், அவள் ஒரு சுமை, எத்தகைய உரிமையும் பெறத் தகைமையற்றவள் என்றெல்லாம் கருதப்பட்டாள்.
وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدّاً وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلا سَاءَ مَا يَحْكُمُونَ
இன்னும் அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயங் கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்ததாக ஆகிவிடுகிறது. எதனைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக் கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டு, மக்கள் முன் வராமல்) சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான். அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அல் குர்ஆன்: 16: 58,59


பெண்ணியம் இவ்வாறு இழிவாக நோக்கப்படும் போதுதான் இஸ்லாம் அவள் உயர்ந்தவள், சம அந்தஸ்து மிக்கவள் எனக்கூறியதுடன், அகதியின் நிலையில் இருந்தவளை அதீதியின் நிலைக்கு ஆக்கி, வாரிசுச் சொத்து பண்டத்தில் பண்டமாக இருந்தவளை அப்பொருட்களில் பங்கு பெறுபவளாக மாற்றி, சிற்றின்ப பொருளாக இருந்தவளை சுவனத்து கடவுச்சீட்டை வழங்கும் தாய்மை என்ற உயர்ந்த அந்தஸ்து மிக்க பதவியை கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளதை நாம் காண முடியும்.

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச்சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.  (அல்குர்ஆன்:4:7)

இப்படியான அந்தஸ்த்தைப்பெற்ற  எத்தகைய பண்புகளைக்கொண்டவளாக இருக்க வேண்டும் எனவும், அது குறிப்பிட தவறவில்லை. அத்தகைய பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் போதுதான் அவள் இஸ்லாமியப்பெண் என தன்னை அடையாளப்படுத்த முடியும் எனவும் மிக ஆணித்தரமாக குறிப்பிடுவதைக் காணலாம்.

1. இறைநம்பிக்கையில் உறுதியானவளாக இருத்தல்.
எப்பொழுது இறை நம்பிக்கையில் தளர்வு ஏற்படுகிறதோ, அல்லது தவறான சிந்தனைகள் அவளை ஆட்கொண்டு விடுகிறதோ, அவள் அப்போது இஸ்லாமியப்பெண் என்ற வட்டத்தை விட்டும் நீங்கி விடுகின்றாள். அவள் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் இறைவனின் பக்கமே சார்ந்திருக்க வேண்டும்இ எத்தகைய சூழ்நிலையிலும் அவனையே பிரார்த்திக்க வேண்டும்.

2. இறைவன் என்னைக்கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வுள்ளவளாக தான் மேற்கொள்ளும் விடயங்களில் ஈடுபடுவதுடன், இறைவனுக்கு மாறுசெய்கின்ற விடயத்தில் வெட்க உணர்வுமிக்கவளாக அவள் நடந்து கொள்ள வேண்டும்.

3. தனது வாழ்வில் இஸ்லாமிய ஆடையை அணிபவளாக இருத்தல் வேண்டும்.
எச்சந்தர்ப்பத்திலும் தனது உடல்அங்கங்களை அந்நிய ஆடவர்கள் காணாத முறையில் தன்னை அவள் மறைத்துக் கொள்ளகடமைப்பட்டுள்ளாள். தனது அழகையும், தனது உடல்அங்கங்களையும் தனது கணவனுக்கு மாத்திரமே வெளிப்படுத்துபவளாக ஒரு இஸ்லாமியப்பெண் காணப்பட வேண்டும்.

4. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய ஐங்காலத் தொழுகையை உரிய நேரத்துக்கு தொழுபவளாக இருக்க வேண்டும்.

5. பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பு உள்ளவளாக காணப்படுவாள். நவீன காலத்தில் பெற்றோரை நோவினைப்படுத்தும் பெண்களைப்போன்று நடந்து கொள்ளமாட்டாள்.

6. வீதியில் அவள் பிரயாணம் செய்ய நேரிடும்போது ஒழுக்கமுள்ளவளாகவும், வெட்க உணர்வு மிக்கவளாகவும், அந்நியஆடவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தனது செயற்பாடு அமையாதவளாகவும் காணப்படுவாள். இன்று நாம் அதிகமான யுவதிகளை வீதியில் காணும்  போது அரைகுறை ஆடைகளுடனும், தங்களது உடல்உறுப்புக்கள் வெளியில் தெரியும் அளவுக்கு மிக இறுக்கமான ஆடைகளை அணிந்தவளாகவும், வாசனைத்திரவியங்களையும் பூசிக்கொண்டும் மிக கவர்ச்சிகரமான நிலையில் வீதியில் உலா வருவதைக்காணுகின்றோம். மேலும், வெட்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், தனது இளம் வயது மனைவியரை இந்நிலையில் தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டும் எமது சகோதரர்கள் வீதியில் வலம் வருவது வேதனைப்படவேண்டிய விடயமாகும்.


உங்களது வீடுகளிலே நீங்கள் தங்கியிருங்கள், முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள்) தமது அழகை வெளிப்படுத்தியது போன்று நீங்களும் வெளிப்படுத்தித்திரியாதீர்கள். மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள், ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள். இன்னும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.   (அல் குர்ஆன்: 33 : 33)


7. இஸ்லாமிய யுவதி அந்நியப் பெண்களின் கலாசாரத்தைப்பின்பற்றுவதை ஒருபோதும் விரும்பமாட்டாள். மேலும், பாவமான காரியங்களில் ஈடுபடுவதையும் அவள் தவிர்ந்து கொள்வாள், அத்தோடு ஷைத்தானிய பழக்க வழக்கங்களுக்கு அடிபணியாது தன்னைப்பாதுகாத்துக்கொள்வாள்.

8. நற்பண்பு மிக்கவளாகவும், பணிவுத் தன்மையுள்ளவளாகவும் காணப்படுவாள்.

9. கணவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, தனது வீட்டுக்கடமைகளையும் பொறுப்புணர்வுடன் மேற்கொள்வாள். அத்துடன் தனது குழந்தைகளை இஸ்லாமிய உணர்வுமிக்க குழந்தைகளாக வளர்த்தெடுப்பதில் கரிசனை காட்டுவாள்.

10. தனது நாவை பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், துர்வார்த்தைகளை பேசுவதை விட்டும் தன்னைப்பாதுகாத்துக் கொள்வாள். வீணான பேச்சுக்கள் பேசப்படுகின்ற சபைகளுக்கு செல்வதையும் அவள் தவிர்ந்து கொள்வாள்.

11. இஸ்லாமிய சூழல் ஒன்றை தனது வீட்டில் உருவாக்குவாள்.
எமது வீடுகளில் காணப்படுகின்ற பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள் இஸ்;லாமிய வரையறைக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவளாக இருப்பாள்.

12. பிள்ளைகளின் ஒழுக்க விழுமியங்களை சம காலத்தில் சீரழித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பாள். பிள்ளைகளின் பண்பாடுகளைப் பாழ்படுத்தக்கூடிய ஊடகங்களை மிகக் கவனமாக தனது வீட்டைவிட்டும் தூரமாக்கிவிடுவாள். இவ்வூடகங்கள் கலை நிகழ்ச்சி என்ற பெயரிலும், பொழுதுபோக்குஅம்சங்கள் என்ற பெயரிலும் பிள்ளைகளின் சிந்தனைகளையும், உள்ளத்தையும், அவர்களது பண்பாடுகளையும் சீரழித்து விடாமல் அவதானமாக இருப்பாள். மேலும் அவற்றுக்கான மாற்றீடுகளை வழங்குவதற்கு முயற்சிப்பதுடன், தானும் இவ்வலையில் வீழ்ந்து விடாது தன்னையும் பாதுகாத்துக் கொள்வாள்.

எனவே,  ஓர் இஸ்லாமிய யுவதி அல்லாஹ்வினதும்; அவனது தூதரினதும் கட்டளைகளை பின்பற்றி நடப்பதோடு, ஸஹாபி பெண்களை தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதுடன், நற்குணமிக்கவளாகவும், பத்தினித்தன்மையுடையவளாகவும், மறுமையை தனது இலட்சியமாகக் கொண்டவளாகவும், வீண்விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும், கலாசார சீரழிவுகளில் தான் அகப்பட்டு கொள்ளாமலும் தன்னைப்பாதுகாத்து ஈருலகிலும் வெற்றி பெறவேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் அவளை வேண்டி நிற்கிறது.
     


நன்றி : நூருல் மனார்   


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters