கடன் குறித்து இஸ்லாத்தின் பார்வை...



      கடன் என்பது மனிதர்கள் சர்வசாதரணமாக பணமாகவோ பொருளாகவோ என்று ஒருவர் மற்றவரிடம் வாங்கக்கூடிய ஒரு சூழலில் என்றென்றும் இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் என்றுமே கடன் வாங்காதவராகவும் இருக்கலாம்; ஆனால் கடன் என்பது தனி மனிதன் முதல் நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து அரசுகள் மற்ற அரசுகளிடம் இருந்து இன்று வங்கிகள் மற்ற வங்கிகளில் என்று பலவிதமாக தற்போது புழக்கத்தில் உள்ளது.

சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.

எந்த ஒரு நோக்கத்திற்கு இது வாங்கப்பட்டாலும் இது பிறருடைய உரிமை அது அவருக்கு நிறைவேற்றப் படவேண்டிய ஒன்று அதில் எந்த ஒரு குறையும் வைப்பது கடன் வழங்கியவரின் தனி மனித உரிமையில் பாதிப்பும், இழப்பும் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதனைக் கடன் வாங்கியவர் கவனத்தில் கொள்ளவேண்டும். அதைத் திருப்பியளிப்பதில் மிகவும் கவனத்துடன் முன்னுரிமையளிக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் நபி(ஸல்) அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.



நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்த போது ஒரு ஜனாஸா(பிரேதம்) கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள். இவர் எதையேனும் விட்டு சென்றிருக்கிறாரா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது இல்லை என்றனர், இவர்  கடனாளியா என்று நபி(ஸல்) அவர்கள் (வழமையாக கேட்பது போல்) கேட்ட போது மூன்று தங்க காசுகள் கடன் வைத்திருக்கிறார் என்று நபித்தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே (ஜனாஸா)தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.அப்போது அபு கதாதா(ரலி) (எனும் நபித்தோழர்) அவர்கள், அவர் கடனுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் (ஜனாஸா தொழுகை எனும் மரணித்தவருக்காகான பிராத்தினை) தொழுகையை நடத்தினார்கள்.
(நீண்ட ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல் புகாரி: 2289

இந்த ஹதீஸ் மூலம் கடன் வாங்குவதை சர்வசாதாரண ஒரு செயலாக அலட்சியமாக கருதி செயல்படுவதை மக்கள் கைவிடவேண்டும், கடன் வழங்கியவர் அவர் செய்த கடனுதவிக்குப் பகரமாக இழப்பையும் நஷ்டத்தையும் அடையக் கூடாது என்பதை ஒருவர் மரண நேரத்தில் தொழுகை நடத்த மறுத்து நபி(ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள் என்பது எந்த அளவு இஸ்லாம் தனி மனித உரிமைகளில் கவனம் செலுத்துகின்றது என்பதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும்.

மேலும் இதைபோன்ற பல சம்பவங்கள் மூலம் நபி(ஸல்) அவர்கள் வாய்சொல் அறிவுரைகள் வழங்குவதைவிட அவற்றை செயல் மூலம் தெளிவாக நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். ஒருவர் கஷ்டமான நேரத்தில் இருக்கும் இன்னொருவருக்குக் கடனுதவி செய்யும் போது அவருக்கு வாக்களிக்கப்பட்ட படி அதை திருப்பி தரவேண்டும் தவறினால் புது தவணைகேட்டு தமது இயலாமையை வெளிபடுத்தலாம், அதேபோல் கடன் வழங்கியவர் அவகாசம் அளிக்க வேண்டும் இலகுவாக அவரிடம் செயல்பட வேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் போதிக்கின்றது. ஆயினும் கடன் வழங்கியவர் அதை இழக்கும் நிலையை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்பதே தெளிவு.

இப்படிக் கடன் தருபவர் கடன் கொடுத்த பொருளை இழந்தால் அவர் மீண்டும் கடன் தர பல முறை யோசிப்பார் உதவ முன்வர மாட்டார் என்பதால் உண்மையிலேயே அவசியமான அவசரத் தேவையுடைய மற்றவர்கள் அவர்கள் வறியவர்களாக இல்லையென்றாலும் கூட கடன் பெற வழியில்லாமல் மிகப்பெரும் பாதிப்பிற்கும் இழப்பிற்கும் ஆளாகலாம்.

இங்கு இன்னுமொரு விஷயத்தை இஸ்லாம் விதித்துள்ளதைக் கவனிக்கவேண்டும், அதாவது, கடன் வாங்குவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. ஆனால் கடனை வட்டிக்கு வாங்கவோ வழங்கவோ அனுமதியில்லையென்பது மட்டுமல்லாமல் அதை மிகப்பெரிய தீமையாக என்றென்ரும் நரகத்தில் கிடக்கச்செய்யும் செயல் என்றும் எச்சரிக்கிறது.

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அல் குர்ஆன் 2:275).2:275).

வட்டியின்றி கடன் வழங்கி உதவுபவர்கள் கடனுதவியளிக்க மறுக்கும் நிலை ஏற்பட்டால் மனிதன் வட்டிக்கு வாங்கவேண்டிய சூழ்நிலையில் தள்ளபடுகின்றான் அதன் மூலம் விலக்கப்பட்ட ஹராமான வட்டியில் ஈடுபட்டு மறுமைக்கும் ஈடற்ற இழப்பு ஏற்படுத்திக்கொள்கிறான்.

இப்படி ஒரு முக்கியமான விஷயமாக இஸ்லாம் கடனை கருதுகின்றது என்பதற்கு இன்னுமொரு ஆதாரமாக குர் ஆனின் மிக நீண்ட வசனமாக உள்ள கீழ்க்கண்ட வசனம் கடனைப் பற்றி மிகவும் விரிவாக விவரிக்ககூடிய ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; ...........அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.  (அல்-குர்ஆன் 2:282)

ஆக கடன் எனும் இந்த நிலை அனுமதிக்கப்பட்ட ஒன்று என்றாலும் அதை வழமையாக கொண்டு செயல்படாமல் தமது வாழ்க்கை பயணத்தை தொடர்வதே சிறந்தது , என்பதையும் கடன் வாங்கியவர் அதை திருப்பி தர முன்னுரிமை அளிக்காமல் தாமதமும் இழப்பும் ஏற்படுத்துவது முறையற்றதொரு தீமையென்றும் இந்த திருமறை வசனங்களும், மேற்குறிப்பிட்ட ஹதீசும் எச்சரிக்கின்றன.

மேலும் ஒருவர் எதேச்சையாக கடனை நிறைவேற்றாமல் மரணித்துவிடும் போது அவருடைய கடனுக்கு அவருடைய உறவினர்களோ தோழர்களோ பொறுப்பேற்று அதை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters