இஸ்லாம் மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். கொள்கை, கோட்பாடு, வணக்கம், தண்டனைக் கோவை, பண்பாடு, குடும்ப வாழ்க்கை, பொருளீட்டல் என பல்வேறு விடயங்களில் இஸ்லாம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த வகையில் வாரிசு உரிமை தொடர்பாகவும் அது கவனம் செலுத்தத் தவறவில்லை.
ஒரு முஸ்லிம் விட்டுச் செல்கின்ற சொத்துக்கள் அனைத்தும் அவருக்குப் பின் யார் யாருக்கு எப்படிப் போய்ச் சேர வேண்டும் என்பதை விளக்குவதே வாரிசுரிமைச் சட்டமாகும். இக்கலை இல்முல் மீராஸ், இல்முல் பராஇழ் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
முஸ்லிம்கள் உயிர் வாழ்கின்ற போதும் அவர்கள் இறந்த பின்னரும் வாழ்க்கையில் குழப்ப நிலைகளும் சிக்கல்களும் ஏற்படக் கூடாது. ஏன்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். எனவேதான் இவ்விடயத்தில் மிகத் தெளிவான சட்டங்களை அது வகுத்துள்ளது.
ஆரம்ப கால சமுகங்களில் வாரிசுரிமை.
இஸ்லாம் வாரிசுரிமை விடயத்தில் தெளிவான விதிகளை அமைத்திருக்கின்றது. இது பற்றிய தெளிவான கருத்தோட்டம் இஸ்லாத்திற்கு முன்னர் காணப்பட வில்லை.
யூதர்கள் மத்தியில் வாரிசுரிமை பற்றி வித்தியாசமான கருத்தே நிலவி வந்தது. மரணித்தவருக்கு ஆண் குழந்தை இருக்கையில் மனைவிக்கும், பெண் குழந்தைக்கும் சொத்தில் பங்கு மறுக்கப்பட்டிருந்தது. மூத்த சகோதரனுக்கு, இளைய சகோதரனுக்கு இருவருக்குரிய பங்கு வழங்கப்பட்டது. மகளின் மகனும் இல்லாத சந்தர்ப்பத்தில் தான் மகளுக்கு சொத்துக்கள் வழங்கப்பட்டன. மரணித்தவருக்கு மனைவி மக்கள் இல்லாத போது தந்தை, பாட்டன் ஆகியோருக்கு பங்கு கிடைக்கும் நிலை இவர்களிடத்தில் காணப்பட்டது.
இஸ்லாத்திற்கு முற்பட்ட ஜாஹிலிய்யா சமுகத்தில் வீரமும், ஆண்மையும் நிறைந்த ஆண்களுக்கே சொத்துக்கள் சேர வேண்டுமென்ற ஒரு கருத்தோட்டம் நிலவியது. ஏனெனில் அக்காலத்தில் காணப்பட்ட கோத்திர சண்டையில் ஈடுபடாதிருந்தவர்களுக்கு பங்கு வழங்குவது நியாயமில்லை என அவர்கள் கருதியிருந்தனர்.
இஸ்லாம் இவ்விடயத்தில் மிக நீதமிக்க சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவர் விட்டு செல்கின்ற சொத்துக்கள் அனைத்தும் ஆண்களை மட்டுமே போய் சேர வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. பெண்களுக்கும் இவ்விடயத்தில் நியாயமான உரிமைகளை வழங்கியுள்ளது. அவ்வாறே போராட்டங்களில் ஈடுபடாத சிறுவர்கள், முதியோர்கள், தாய்மார்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற முடிவினை அது அறிமுகப்படுத்தியது.
அல்குர்ஆனின் சூரத்துன் நிஸா அத்தியாயத்தின் 11,12 ஆம் வசனங்கள் வாரிசுரிமை சட்டம் பற்றி மிகத் தெளிவாக பேசுகின்றது.
'பெற்றோரும் நெருங்கிய உறவினரும் விட்டு சென்றதில் ஆண்களுக்கு பங்கு இருக்கின்றது. அவ்வாறே பெற்றோரும் நெருங்கிய உறவினரும் விட்டு சென்றதில் ஆண்களுக்கு பங்கு இருக்கின்றது.
ஜாபிர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நோயுற்ற போது நபியவர்களும், அபூபக்கர் (றழி) அவர்களும் நடந்து என்னை நலம் விசாரிக்க வந்தனர். ஆப்போது நான் மயக்கத்திலிருந்தேன். நுபியவர்கள் வுழு செய்து மீதி நீரை என் மீது ஊற்றினார்கள். அப்போது நான் மயக்கம் தெளிந்தேன். ஆல்லாஹ்வின் தூதர் அவர்களே எனது பொருளாதாரத்தில் நான் எவ்வாறு நான் நடந்து கொள்ளட்டும் எனக் கேட்டேன். நபியவர்கள் பதிலளிக்கவில்லை. அப்போது வாரிசுலிமை தொடர்பான வசனம் இறங்கியது. (புகாரி)
ஒரு மனிதன் விட்டுச் சென்ற சொத்தானது அவனது குடும்பத்தினருக்குச் சேரவேண்டும் எனக் கூறிய இஸ்லாம் நபியவர்கள் விட்டுச் செல்கின்ற சொத்தினை பொது உடைமையாக பிரகடணப்படுத்தியுள்ளது.
பாத்திமா (றழி), அப்பாஸ் (றழி) ஆகியோர் நபியவர்கள் கைபர் எனுமிடத்தில் விட்டுச் சென்ற பதக் எனும் தோட்டத்தினை வாரிசு சொத்தாக பங்கீடு செய்ய வேண்டும் என அபூபக்கர் (றழி) அவர்கள் நபியவர்கள் தங்களது சொத்துக்கள் அனந்தரமாக்கப்பட மாட்டாது. நாங்கள் விட்டுச் செல்வது ஸதகாவாகும். எனக் கூறியதை தான் கேட்டதாகச் சொன்னார்கள். (புஹாரி)
அபூ ஹூறைறா (றழி) அவர்கள் அறிவிக்கும் பிரிதோர் ஹதீஸில் நபியவர்கள் கூறினார்கள் 'எனது வாரிசுக் காரர்கள் தீனாரை பங்கு போட்டுக் கொள்ள மாட்டார்கள். எனது மனைவியர்களின் செலவுகள், பணியாளுக்கான கூலி (போன்றவற்றுக்கு)ப்பின்னால் நான் விட்டுச் செல்வது ஸதகாவாகும் எனக் கூறினார்கள். (புஹாரி)
இந்த நபி மொழிகள் நபியவர்கள் விட்டுச் செல்லும் சொத்தினை பொதுவுடமையாக்கிக் கொள்ள வேண்டும் என சொல்லுகிறது.
ஒரு முஸ்லிம் விட்டுச் செல்லும் சொத்தானது அவனது வாரிசுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
அபூ ஹூறைறா (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் முஃமீன்களுக்கு அவர்களை விடவும் தான் பொறுப்பானவன் எனவே அவர் கடன் பெற்று அதனை திருப்ப செலுத்த முடியாத நிலையில் மரணிக்கின்றாரோ அதனை நிறை வேற்றும் பொறுப்பு எமதாகும். எவர் சொத்தினை விட்டு விட்டு மரணிக்கின்றாரோ அது அவரது குடும்பத்திற்குரியதாகும். (புஹாரி)
அதாவது ஒருவர் கடன் பெற்று அதனை மீள் செலுத்தாத நிலையில் மணித்தால் அதனை இஸ்லாமிய அரசு பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு இல்லாது அவர் தனது கடனை அடைப்பதற்கான வழிகளை செய்திருந்தால் அவரது சொத்துக்களிலிருந்து அக்கடனை அடைத்து விட்டு மீதியினை அவரது குடும்பத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் நோக்கம்.
அல்குர்ஆனும், சுன்னாவும் வாரிசுரிமையை மிகத் தெளிவாக விளக்குவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. மக்கள் சீரான உறவுகளை நெறிப்படுத்துவது அதன் மேலான நோக்கமாகும். மக்கள் மத்தியில் உறவுகளை சீர் செய்யவும் நெருங்கிய இணைப்பை ஏற்படுத்தவும், மோதல்களைத் தவிர்க்கவும் அவர்களிடத்தில் பண்பட்ட மனச் சாட்சியை ஏற்படுத்தவும் அவற்றின் மூலம் சிறந்த பயன்களைப் பெறவும் சொத்துக்களைப் பங்கீடு செய்யவும் விடயத்தில் தெளிவான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் குடும்ப அமைப்பு என்பது சமுக கட்டமைப்பிலும், அதன் சீராக்கத்திலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இன்றைய நடைமுறையில் சொத்துக்களில் காணப்படும் பேராசை இரு சகோதரர்களை விரோதிகளாகவும், தீரப் பகை கொண்டவர்களாகவும் மாற்றுகின்றது.
சொத்துக்கள் தனக்குக் கிடைக்க வேண்டும் என உலக வரலாற்றில் நடந்த கொலைகள், ஆட் கடத்தல்கள் எத்தனை?
இவற்றுக்கெல்லாம் காரணம் யாதெனில் முறையான நியாயமான மன திருப்தியோடு ஏற்றுக் கொள்ளத் தக்க சொத்துப் பங்கீடு இல்லாமையே. எனவேதான் குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மை, குரோதம், வஞ்சகம், கொலையுணர்வு, மாறாப் பகை போன்ற கீழ்த்தரமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் மிக நியாயமான விதி முறைகளை இவ்விடயத்தில் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனி நபரின் சொத்துக்கள் என்றுமே அவர் உடைமையாக இருப்பதில்லை அவர் இறந்த பின் அவை குடும்ப அங்கத்தவர்களிடையே பகிரப்பட்டு சமுக உடைமையாக மாறுகின்றது. இதனால் குடும்ப அமைப்பும், சமுக அமைப்பும் சிறப்பாக இயங்க வழி வகுக்கின்றது.
சொத்துக்களை பங்கீடு செய்யும் போது வசதி கூடியவர்களது உடைமைகள் வசதி குறைந்தவர்களுக்கு கிடைக்க வழி பிறக்கின்றது. இங்கு சமுக ஏற்றத் தாழ்வுகள் நீக்கப் படுவதானது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பம்சமாகும்.
இவ்வாறான சமுக சீராக்கத்தின் தாக்கம் செலுத்தும் கலையான இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டக் கலையை இஸ்லாமிய சமுகம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
நன்றி : நூருல் மனார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக