வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்!!!




(சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்) வரலாற்றிலிருந்து..!)
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 42 : வசன எண் : 40)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி என்ற பெயர் இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயராகும். ஆம்! புனித ஜெருஸலம் நகர் கிறிஸ்தவர்களின் பிடியில் 90 ஆண்டு காலம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்கள் மட்டுமல்ல யூதர்களும் கூட அங்கு தினமும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். சிலுவை யுத்தம் நடந்த காலங்களில் ஜெருஸல நகரத் தெருக்களில் கரண்டைக் கால் அளவுக்கு மனித இரத்தம் ஓடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அத்தகையதொரு கொடுமையிலிருந்து அந்தப் புனிதப் பூமியை மீட்டதோடல்லாமல், தனது மனித நேயத்தால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த பண்பாளராகவும் சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் திகழ்ந்தார்கள்.

இரண்டாம் உமர் என்று போற்றப்படக் கூடிய உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பிறகு, இஸ்லாமிய நெறிமுறைப்படி ஆட்சி செய்த பண்பாளர் என்ற நற்பெயரை இவர் பெற்றிருக்கின்றார் என்பதிலிருந்து இவரது ஆட்சி முறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகும்.




சிலுவை யுத்தம் நடந்து முடிந்த பின், சுல்தான் ஸலாஹுத்தீன் (ரஹ்) ஜெருஸலம் நகரில் நின்று கொண்டிருக்கின்றார். அப்பொழுது ஒரு பெண்களின் குழுவொன்று அவரைக் கடந்து செல்கின்றது. அப்பெண்களின் குழுவில் இருந்த சிறுமி ஒருத்தி சுல்தானைப் பார்த்து,
ஓ சுல்தான் !! நாங்கள் இந்த நகரை விட்டுக் கிளம்புவது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா?! நீங்கள் பிடித்து வைத்திருக்கக் கூடிய போர்க்கைதிகளின் தாயார்களும், மனைவிமார்களும், தங்கைகளும், இன்னும் பெற்றெடுத்த மகள்களுமாக, ஆண் துணைகளின்றி நாங்கள் இந்த நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றோம். உங்களிடம் இருக்கக் கூடிய எங்களுடைய ஆண்களை விட்டால், எங்களுக்கு வேறு ஆதரவு கிடையாது, அவர்களை நாங்கள் இழந்து விட்டோமென்றால் எங்கள் வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் நாங்கள் இழந்தவர்கள் போலாவோம். எங்கள் மீது இரக்கப்பட்டு, அவர்களை நீங்கள் விடுவித்தீர்கள் என்று சொன்னால் எங்களது வாழ்க்கையையே மீட்டித் தந்த நன்மைக்குரியவராவீர்கள்! என்று அந்தப் பெண்கள் முறையிட்டு நின்றார்கள்.

அந்தப் பெண்களைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு, தனது தோழர்களை நோக்கி, இவர்களது ஆண்களை விடுதலை செய்து இவர்களுடன் அனுப்பி வையுங்கள். இன்னும் இங்கு இருக்கும் பெண்களின் துணைக்கிருந்த ஆண்களில் எவரும் போரில் கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பிரதியீடாக அவர்களுக்கு பண உதவி செய்து அனுப்பி வைக்கும்படியும் ஸலாஹுத்தீன் உத்தரவிட்டார்.

அப்பொழுது, ஒரு பிரஞ்சுச் சிறுமி சுல்தான் அருகில் வந்து, கொலைகாரர்களே! நீங்கள் என்னுடைய தந்தையைக் கொன்று விட்டு, என்னுடைய சகோதரர்கள் இருவரையும் சிறை பிடித்து விட்டீர்களே! பாவிகளா? என்றாள். அவளது சினத்தைக் கண்டு கொள்ளாத ஸலாஹுத்தீன் இவளது சகோதரர்களையும் விடுதலை செய்யுங்கள் என்று தனது தோழர்களுக்கு உத்தரவிட்டு அந்தச் சிறுமியைப் பார்த்து, சிறுமியே! உன்னுடைய தந்தை எதனால் கொல்லப்பட்டார் என்று தெரியுமா? உன்னுடைய தந்தையால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போரால் தான் அவர் தன்னுடைய மரணத்தைத் தழுவினார் என்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரையும் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போர் காவு கொண்டு விட்டது என்று பதிலளித்தவுடன், குற்ற உணர்வின் மேலீட்டால் அந்தச் சிறுமி தன்னுடைய தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, என்னுடைய இந்த அறியாமைக்கு நான் வருந்துகின்றேன், உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் என்று கூறியதோடு, இவ்வளவு பண்பாடுள்ள உங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதற்கு வருந்துகின்றேன் என்று கூறி, சுல்தான் ஸலாஹுத்தீனிடம் மன்னிப்புக் கோரினாள்.

நான் சந்தித்த இந்தக் கொடூரமான சூழ்நிலைத் தாக்கத்தின் காரணமாக உங்களிடம் நான் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு என்னை மன்னியுங்கள், இன்னும் உங்களைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் எங்களது ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த வெறுப்புணர்வின் காரணமாகவே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். ஆனால் இப்பொழுது நான் உண்மையைக் கண்டு கொண்டேன் என்பது மட்டுமல்ல, இதுவரை நாங்கள் அறியாமையில் இருந்திருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொண்டு விட்டேன், இப்பொழுது உங்கள் முன் நான் நிற்பது, உங்களது மன்னிப்பை வேண்டித் தான் என்று கூறி முடித்தாள்.

எங்களை வழி கெடுத்த அந்தப் பாவிகள் மீது சாபம் இறங்கட்டும், அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டது மட்டுமின்றி, எங்களது புனித பூமியில் இரத்தம் சிந்தவுடம் வைத்து விட்டார்கள். எங்கள் உற்றார் உறவினர்களிடமிருந்து எங்களைப் பிரித்தும் விட்டார்கள். எங்களது உணர்வுகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்களது நலன்களை அடைந்து கொண்டார்கள்.

இப்பொழுது நாங்கள் உண்மையை நேரடியாக உணர்ந்து கொண்டு விட்டோம், அவர்கள் சொன்னவற்றில் எதுவும் உண்மை இல்லை என்பதையும் கண்டு கொண்டோம் என்றும் அவள் கூறினாள்.

சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்)அவர்களது வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு, அவரைப் பற்றி அறிந்து கொள்ளவும், இன்னும் உண்மையான இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும், அவர்களது கொள்கைகளையும் அறிந்து கொள்ள இதனை விடச் சிறந்த அறிமுகம் தேவை இல்லை.

அடக்குமுறையை அதைப் போன்றதொரு வலிமை கொண்டு தடுக்கப்பட வேண்டும்
இறைவன் வகுத்திருக்கும் தண்டனைகளுக்குரிய வரம்புகளை மீறாது பேண வேண்டும்
வலிமையற்றோரையும், போரில் தோற்கடிக்கப்பட்டோரையும் பழிக்குப் பழி வாங்காமல், அவர்களை மன்னித்து, நீதமுடன் நல்ல முறையில் நடத்த வேண்டும்,
இந்த மூன்று அடிப்படைகளின் கீழ் நின்று ஆட்சி செய்தவர் தான் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள். இன்னும் தவறிழைப்பவர்களுக்குத் தண்டனை வழங்குவதை விட, அவர்களது குற்றங்களை உணரச் செய்து மன்னித்து விடுவதே மேலானது என்ற கொள்கையைக் கொண்டவராகத் திகழ்ந்தார். இது மட்டுமல்ல இன்னும் இரக்கம், அன்பு, வீரம், கொடைத்தன்மை, பொறுமை ஆகிய நற்குணங்களுக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தார்.

இத்தகைய நற்குணங்களின் மூலமாகத் தான் பிரபல சிலுவை யுத்தங்களில் மிகப் பெரிய படைகளை எதிர்த்து, அவரால் வெற்றி பெற முடிந்தது.
பல போர்களில் வெற்றி பெற்று அதனால் கிடைக்கப் பெற்ற செல்வங்கள் இருந்தும், அவற்றில் இருந்து எதனையும் தனக்காக ஒதுக்கிக் கொள்ளாத பண்பாளராகத் திகழ்ந்தார். ஒருமுறை ஒரு தோழர் இவ்வாறு கேட்டார் :
உங்களுக்குக் கிடைத்த இந்த செல்வத்தை ஏழைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இன்னும் போர்களுக்குமே செலவழித்துக் கொண்டிருக்கின்றீர்களே? உங்களுக்கென எதனையும் சேமித்து வைக்கக் கூடாதா? என்று கேட்டார்.
ஒரு மனிதனின் பலம் எங்கிருக்கின்றதென்றால் அவன் அவனைப் படைத்தவனிடம் கேட்கும் பிரார்த்தனையின் பலனில் தான் இருக்கின்றது, ஏழை அடியானுடைய பிரார்த்தனையை இறைவன் வீணடித்து விடாமல், கண்டிப்பாக அங்கீகரித்து விடுவதால், அவன் முன்னிலையில் நான் ஏழை அடியானாக நிற்கவே ஆசைப்படுகின்றேன், என்று தனது தோழருக்குப் பதிலிறுத்தார்.

இஸ்லாம் வரையறுத்திருக்கும் வரையறைகளைப் பேணுவதிலும், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில், மேலதிகமான வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபடக் கூடியவராகவும், இன்னும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளை மிகவும் பேணுதலுடன் கடைபிடிக்கக் கூடியவராகவும் சுல்தான் ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்கள் திகழ்ந்தார்கள். இரவு நேர தஹஜ்ஜத் தொழுகைகளை தினமும் நிறைவேற்றக் கூடியவராகவும் இருந்தார்.
புகழ்மிக்க மன்னராக இருந்த போதிலும், அவர் இறந்த பொழுது ஒரு தினாரும், 47 திர்ஹம்களைத் தவிர வேறு எந்தச் சொத்தையும் அவர் தனது சொத்தாக விட்டு வைத்திருந்திக்கவில்லை. இன்றைய ஆட்சியாளர்களைப் போல அரண்மணை போன்ற பங்களாக்களையோ, தோட்டங்களையோ, ஆடம்பரமான எந்தப் பொருளையும் அவர் தன்னுடைய வாரிசுகளுக்கு விட்டு விட்டுச் செல்லவில்லை. அவர் வைத்திருந்த அந்தப் பணம், அவரது அடக்கச் செலவுகளுக்குக் கூட போததாகவே இருந்தது. இருப்பினும் அவர் சாதாரண ஆட்சியாளராக அவர் மரணிக்கவில்லை, இன்றிருக்கும் சிரியா விலிருந்து லிபியா வரை இன்னும் பாலஸ்தீனம், எகிப்து அடங்கலாக உள்ள பிரதேசத்தின் தனிப்பெரும் ஆட்சியாளராக இருக்கும் நிலையில் தான் அவர் மரணமடைந்தார்.

அவர் வாழ்ந்த சம காலத்தில் மன்னர்கள் படாடோப மிக்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, தனக்காக எதனையும் சேமித்து வைக்காது, இஸ்லாமியக் கொள்கை வழியின் பால் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் தான், இறைவன் அவருக்கு அவ்வளவு பெரிய வெற்றியை வழங்கினான். இன்னும் மாற்று மதத்தவர்களும் கூட போற்றும் உயர்ந்த மனிதராக வாழ்ந்து காட்டினார். அதன் மூலம் அவர் இஸ்லாமியக் கொள்கைகளைப் பூரணமாகப் பின்பற்றி வாழ்ந்த காரணத்தால், தான் வாழ்ந்த சம கால மக்களுக்கொரு உதாரண மனிதராகவும் திகழ்ந்திருக்கின்றார்.
ஒருமுறை அவர் ஒரு மனிதரால் பாதிக்கப்பட்டிருந்த போதும், ஆட்சியாளர் என்ற நிலையில் இல்லாது நீதி கேட்டு நீதிபதியிடம் சென்று முறையிட்டார். இவரது பொருளைக் கவர்ந்து சென்ற மனிதருக்கு எதிரான வழக்கில், பொருள் இவருடையது தான் என நிரூபிக்கப்பட்ட பின்னர், அந்தப் பொருளுக்குச் சொந்தம் கொண்டாடிய அந்த மனிதரிடமே அந்தப்பொருளை ஒப்படைத்து, அந்த மனிதரையும் மன்னித்து விட்டார்.

இது தான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் தேவையுமாக இருக்கின்றது. இஸ்லாத்தின்படி வாழ்ந்து காட்டுங்கள். வெற்றிப்படிகள் உங்கள் காலுக்கடியில். வாருங்கள் இஸ்லாத்தினை வாழ்ந்து காட்டுவோம்!!
இறைமறை சுட்டிக் காட்டும் உதாரணமிக்க, படைக்கப்பட்ட சமுதாயங்களிலேயே உன்னதமான சமுதாயம் என்று உலகுக்கு அறிவித்துக் காட்டுவோம்.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (இறையச்சத்திற்க்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 5 : வசன எண் :08)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters