குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்டல் அவசியம்



வெற்றி பெறுவதற்கான பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொள்வது சிறந்த வழிமுறையாகும். நம்முடைய வாழ்வில் வெற்றி பெறுவதற்காகவும், இன்னும் ஏனைய மனிதர்களுடன் தொடர்பு கொள்ளல் மற்றும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் உலக அறிவைத் தேடி நம்முடைய நேரத்தை, பணத்தை, உழைப்பை செலவழிப்பதோடு, நம்முடைய உணர்வுகளையும், பொறுமை எனும் சகிப்புத் தன்மையையும் அதில் காட்டக் கூடியவர்களாக இருக்கின்றோம்.


நாம் தேடிப் பெற வேண்டிய செல்வத்திலெல்லாம் மிகச் சிறந்ததும், நம்முடைய தலைமுறைகளுக்கு அதனைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும் நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளதொரு அறிவு இருக்கின்றதென்றால் அது இஸ்லாமிய அறிவாகும். நம்முடைய குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பாளர்களின் மீதாக கடமையாக இருக்கின்றது, அவர்களது வெற்றி மற்றும் தோல்வி பற்றி நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். குடும்பத்தவர்களின் வெற்றி மற்றும் தோல்வி குறித்து நாம் விசாரிக்கப்படுவோம் என்பது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்தரித்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோமாக :

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.''

''ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'' என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன். (புகாரீ)

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும்'' என்று கூறினார்கள். (புகாரீ - 628)

மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து ஒரு குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்குக் கூறியிருப்பது விளங்கும். நம்முடைய குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முதற்கடமை அவர்களுக்கு இஸ்லாமிய அறிவூட்டுவது தான். குழந்தைகள் என்பவர்கள் நம்முடைய சொத்துக்கள், பெறுமானமுள்ள செல்வங்கள் என்று அல்லாஹ் கூறுவதோடு, அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பது குறித்து மறுமை நாளிலே விசாரிக்கப்படுவீர்கள் என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றான் :

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு'' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (64:15)

அவர்கள் நம்முடைய குழந்தைகள் தான், ஆனால் அவர்கள் நமக்குச் சோதனைப் பொருட்கள் என்று இறைவன் கூறுகின்றான், அது பற்றி நாம் விசாரிக்கப்படுவோம் என்றும் கூறுகின்றான். இஸ்லாத்தின் அறிவைப் பெற்றுக் கொள்வதின் மூலமாகத்தான் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக ஆக முடியும், அல்லாஹ்வுக்கு சேவை செய்யும் நல்லடியாகர்களாக மாறுவதன் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும். அல்லாஹ்வின் திருமுன் கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உங்களது குழந்தைகள் வணக்கசாலிகளாக இருக்குமென்று சொன்னால், படைத்தவனின் பெருமைமிக்க நல்லடியார்களாக நீங்கள் உங்களது இறைவனால் கண்ணியப்படுத்தப்படுவீர்கள். இஸ்லாமிய அறிவூட்டல் என்பது, அறியாமையை விரட்டுவதும், தீமைகளைக் களைவதும் ஆகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை'' (திர்மிதீ 4977, பைஹகீ)

அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''ஆயிரம் வணக்கசாலிகளை விட ஒரு கற்றறிந்த மார்க்க அறிஞருக்கு எதிராகத்தான் ஷைத்தான் அச்சமடைகின்றான்'' (திர்மிதீ 217, மற்றும் இப்னு மாஜா).

பொறுப்பான பிள்ளைகளை வளர்ப்பது

இஸ்லாத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது, அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வதற்காக அடிப்படையோடு அவர்களை வளர்க்க வேண்டும், அவ்வாறு வளர்க்கப்படும் பொழுது தான் அவர்கள் முதுமையான நிலையில் இருக்கின்ற பெற்றோர்களின் மீது கருணை காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இன்றைய உலகு தாய்க்கு ஒரு திருநாள், தந்தைக்கு ஒரு திருநாள் என்று பெற்றோர்களைக் கௌரவிக்கின்றோம் என்ற போர்வையில், அவர்களை நினைவு கூர்வதற்கென்று ஒருநாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றது. அந்த நாளில் தான் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லம் சென்று சந்தித்து வரக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற நாட்களில்.., அவர்கள் அவர்களுக்குப் பாரமாக இருப்பார்கள். எனவே, தான் ஒரு முஸ்லிம் தாயோ அல்லது தந்தையோ தனது அந்திமக் காலத்தில் முதியோர் இல்லத்தில் உறைந்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், அந்தத் தாயும், தந்தையும் தங்களது இளமைக் காலத்தில் பொடுபோக்காகச் செயல்படாமல், உலகக் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே மார்க்கக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

பெற்றோர்களாகிய நீங்கள் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடப்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்களது பிள்ளைகளுக்கு கீழ்க்கண்ட இறைவசனத்தைக் கற்பித்துக் கொடுத்திருப்பது அவசியமாகும். இறைவன் கூறுகின்றான் :

(உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்'' என்று உறுதிமொழியை வாங்கினோம்.

தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (4:36)

பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;. வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (6:151)

இந்த உலகத்தில் உள்ள ஏனைய சமுதாய மக்களைக் காட்டிலும், ஒரு முஸ்லிம் தனது பெற்றோர்களுக்கு எந்தளவு கடமையுணர்வுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட குர்ஆனின் வசனங்களும், ஏனைய நபிமொழிகளும் உணர்த்தியிருப்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் :

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (புகாரீ 5971)

பெற்றோர்களில் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் இன்னும் அதனை வளர்த்தெடுப்பதற்கும் எந்தளவு கஷ்டத்தை அனுபவிக்கின்றாள் என்பதை அறிந்தவனான அல்லாஹ், பெற்றோர்கள் மீது குறிப்பாக தாயின் மீது அதிகளவு இரக்கத்தைக் காட்டி, அவர்களோடு கருணையோடு நடந்து கொள்ளும்படி அறிவுறுத்துகின்றான். குறிப்பாக அவர்கள் முதுமை அடைந்து விட்ட காலத்தில், இயலாமையோடு அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் அவர்களது தேவைகளை முகச்சுழிப்பில்லாமல் நிறைவேற்றிட வேண்டும், அவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகின்றான்.

பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக் மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!'' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:23-24)

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடையதாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன். ஆகவே ''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக் என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.'' ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.'' (31:14-15)

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்;. (46:15)

குழந்தைகளே..! உண்மையிலேயே நீங்கள் உங்களது இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால், உங்களது தாய் தந்தையருக்கு பணிவிடை செய்யுங்;கள். அவர்கள் இறைவனுக்கு மாறு செய்யும்படி உங்களை ஏவாதவரைக்கும் அவர்களோடு நீங்கள் கண்ணியத்துடனேயே நடந்து கொள்ளுங்கள். அவர்களை எந்தளவு கண்ணித்துடன் நடத்துகின்றோமோ, அதேபோன்றதொரு கண்ணியத்தை அல்லாஹ் நமக்கு வழங்குவான். அதாவது, பெற்றோர்களைப் பேணுவதன் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார் :

அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), '(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று கூறினார்கள்:

நான் நபி(ஸல்) அவர்களிடம் ''கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?' என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன். 'தாய் தந்தையருக்கு நன்மை செய்வது' என்றார்கள். (நான் தொடர்ந்து) 'பிறகு எது?' என்றேன். அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுதல்'' என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.(புகாரீ 5970)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''அவன் மண்ணோடு மண்ணா(கி நாசமா)கட்டும்'' என்று (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், யார் அவர்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''வயதான காலத்தில் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்து (அவர்களை முறையாகப் பேணிக் கவனித்துக் கொள்ளாதவன்), அதன் மூலம் சுவனம் செல்லாதவன்'' என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம் 6189)

உங்களுக்கு வயதான பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்களைச் சரியான முறையில் கவனித்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அல்லாஹ்வினுடைய கட்டளைகளைப் பேணி நடந்து கொள்வதன் மூலமாக அவன் இறைவனுடைய வெகுமதியாக சுவனத்தின் சிறந்த பகுதியினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இன்றைய உலகு பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த முதியோர் பராமரிப்பு இல்லங்கள், இப்பொழுது ஊருக்கு ஊர் முளைத்து விட்டது. இன்னும் அதுவும் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுகின்றது. எனவே, முதுமையடைந்த நாளில் நாமும் முதியோர் பராமரிப்பு இல்லத்திற்குச் சென்று விடக் கூடாது என்று விரும்புகின்ற ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டட்டும் அல்லது இஸ்லாமியக் கல்வியை வழங்கட்டும்.

அப்பொழுது தான் இயலாத அந்த நாளில் நம்முடைய உதவிக்கு குழந்தைகள் முன்வரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை விட, அதனை ஒரு இறைக்கடமையாகக் கருதிச் செயல்படுவார்கள். இன்னும் ஒவ்வொரு நேரத் தொழுகைகளிலும் நம்மை நினைவு கூரக் கூடியவர்களாக இருப்பார்கள். மரணத்தை எய்தி விட்டு, நன்மை தீமைகளுக்கான கணக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களது பிரார்த்தனைகள் மூலமாக நாம் மேலதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக ஆகலாம். எனவே, இந்த உலக வாழ்க்கையில் மட்டுமல்ல மறுமையிலும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், இறையச்சமுள்ள குழந்தைகளை வளர்ப்பதில் தான் இருக்கின்றது. அத்தகைய நல்லடியார்களான குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்காகப் பிரார்த்திக்கும் பிரார்த்தனைகள் இவ்வாறு இருக்கும் என்பதையும் இறைவன் நமக்கு தனது திருமறையின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகின்றான் :

(''என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!'' ''எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக'' (என்று பிரார்த்தித்தார்). (14:40-41)

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக் மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!'' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)

''என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே'' (என்றும் கூறினார்). (71:28)

இஸ்லாமிய நெறிமுறைகளின்படி நமது குழந்தைகளை வளர்க்கும் பொழுது, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக மாறி தொழுகையை முறையாகக் கடைபிடிக்கக் கூடியவர்களாக ஆகி விடுவார்கள், இது அல்லாஹ்விடம் நற்பேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாகும், இன்னும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நற்பேறுகள் அந்தக் குழந்தையைப் பெற்றவரின் மரணத்திற்குப் பின்பும் தொடரக் கூடியவைகளாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது நபிமொழி ஒன்றில்,

''ஒரு மனிதர் சில உயர்தரங்களுடன் சுவனத்தில் உயர்த்தப்படுவார், (அப்பொழுது) அவர்கள் கூறுவார், ''என்ன காரணத்திற்காக இதனை நான் பெற்றுக் கொண்டேன்?'' அதற்கு, ''உங்களது மகன் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கின்றார்'' என்று கூறப்படும். (புகாரீ 1613)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், மனிதர்கள் இறந்த பின்பும் தொடரக் கூடிய நன்மைகள் மூன்று இருக்கின்றன, அவை : ''1. அவர் செய்த தருமங்கள் மூலமாகத் தொடரக் கூடிய நன்மைகள், 2. மனிதர்கள் பயனடைவதற்காக விட்டுச் செல்லும் கல்வியின் மூலமாக, 3. அவருக்காகப் பிரார்த்திக்கக் கூடிய பிள்ளைகள் மூலமாக.'' (முஸ்லிம் 4005)

இஸ்லாமிய கல்வியை அறிந்து கொள்வதன் அவசியம் பற்றியும், அதற்காக நேரத்தைச் செலவிடுவது பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். இறைநம்பிக்கையாளர்களின் மிகச் சிறந்த பண்பு என்னவென்றால், கல்வியைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்வதாகும். கீழ்க்கண்ட நபிமொழியானது ஒரு மனிதர் தொடர்ந்தும் கல்வியைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''பயன்தரத்தக்க கல்வியைத் தேடுவதில் ஒரு இறைநம்பிக்கையாளர் (போதும் என்ற நிலையில்) திருப்தி அடைந்து விட மாட்டார், அவர் மரணமடையும் வரைக்கும் அதனைத் தேடிக் கொண்டே இருப்பார், இன்னும் (அதன் காரணமாக) அவர் சுவனத்தில் நுழைந்திடுவார். (திர்மிதி 222)

நல்லறங்கள் செய்வதற்கும் நம் குழந்தைகளை ஆர்வப்படுத்த வேண்டும், அது அவர்களது இறைநம்பிக்கையை வளர்க்கும், அதேநேரத்தில் இறைவனுடைய திருப்பொருத்தத்தையும், இன்னும் கருணையையும் அவர்களுக்குப் பெற்றுத் தரும். மரணித்த பின் உயிர்கொடுத்து எழுப்பப்படுகின்ற அந்த நாளில் நாம் நம்முடைய வாழ்வை எவ்வாறு கழித்தோம் என்று வினவப்படுவோம், நமது செல்வங்களை, நமது அறிவை எவ்வாறு செலவழித்தோம் என்றும் வினவப்படுவோம். அதனை வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகள் அனைத்தைப் பற்றியும், அதில் நாம் செலவழிக்கின்ற அனைத்தைப் பற்றியும் இறைவனால் கேள்வி கேட்கப்பட இருக்கின்றோம் என்பதைக் கீழ்க்காணும் நபிமொழி நமக்கு விவரிக்கின்றது :

அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''ஐந்து விசயங்கள் குறித்து ஒருமனிதனிடம் மறுமைநாளில் வினவப்படும் : 1. அவனது வாழ்க்கை, அதனை எவ்வாறு செலவழித்தான், 2. அவனது இளமை, 3. அவன் எவ்வாறு முதுமைப் பருவத்தை அடைந்தான், 4. அவனது செல்வம், அதனை எவ்வாறு பெற்றான், இன்னும் அதனை எவ்வாறு செலவழித்தான், 5. இன்னும் அவன் பெற்றிருந்த அறிவை வைத்து அவன் என்ன செய்தான் என்பது குறித்தும் வினவப்படுவான். (திர்மிதி 5197)

அபூ பர்ஸா நத்லா இப்னு உபைத் அல் அஸ்லமி (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''மறுமை நாளிலே இந்தக் கேள்விகளைக் கேட்கப்படும் வரை ஒருஅடியான் நின்று கொண்டிருப்பான் : அவனது வயது, அதனை அவன் எவ்வாறு செலவழித்தான் என்பது பற்றியும், அவனது கல்வி அதனை அவன் எவ்வாறு பயன்படுத்தினான் என்பது பற்றியும், அவனது செல்வம் அதனை அவன் எவ்வாறு பெற்றான், எவ்வாறு செலவழித்தான் என்பது பற்றியும், இன்னும் அவனது உடம்பு, அதனை எவ்வாறு பயன்படுத்தினான் என்பது பற்றியும் வினவப்படும் (வரைக்கும் அவன் நின்று கொண்டிருப்பான்)'' என்று கூறினார்கள். (திர்மிதி 407)

நாமும் இஸ்லாமியக் கல்வியைக் கற்பதோடு,அதனை நம்முடைய பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாம் பெற்ற கல்வியினை பயனுள்ள முறையில் கழித்ததற்காக இறைவனிடம் நாம் பதில் சொல்லக் கூடிய நற்பாக்கியத்திற்குள்ளாவோம். இன்னும் நாமும், நம்முடைய பிள்ளைச் செல்வங்களும் மறுமை நாளிலே ஏற்படவிருக்கின்ற சோதனையான கட்டங்களில் வெற்றி பெறும் கூட்டத்தினராவோம். இத்தகையோர்களுக்குத் தான் சுவனம் சித்தப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என்று இறைவன் நல்லடியார்களுக்குச் சுபச் செய்தி வழங்கியிருக்கின்றான். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (4:122)

ஆலோசனைகள்

மேற்கண்ட தொடரிலிருந்து இறைநம்பிக்கை மிக்க இளவல்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில், அவ்வாறானதொரு சமூகத்தை நீங்கள் உருவாக்க விரும்பினீர்கள் என்றால் முதலில் அந்தக் கல்வியைத் தேடிக் கற்பதில் நீங்கள் ஆர்வமிக்கவர்களாக இருக்க வேண்டும், அதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வியை உங்களது இளவல்களுக்கு வழங்க வேண்டும். உங்களால் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கான நேரத்தைச் செலவிட இயலாத நிலையில் இருந்தால், அவர்களை இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் சேர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு இஸ்லாமியக் கல்வியை வழங்க முடியும். அத்தகைய கல்வி நிலையங்களில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனியாக கல்வி போதிக்கக் கூடிய வகையில் அமைப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியம். அதுவும் இயலாதபட்சத்தில், அத்தகைய கல்வி நிலையங்கள் அருகில் இல்லை என்றால், தொலைதூரக் கல்வி மூலம் இஸ்லாமியப் பயிற்சி வழங்கக் கூடிய அமைப்புகள் உள்ளன, அவற்றுடன் இணைந்து இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உண்மையில் உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்குமிடையே நல்ல நெருக்கம் ஏற்பட வேண்டுமென்றால், உங்களது நேரங்களில் குறிப்பிட்ட அளவு அவர்களுக்காகவென்று ஒதுக்க முன்வாருங்கள். குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகம் கற்றுக் கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்கின்றார்கள். எதிர்பாலினத்தவர்களோடு கலந்து பழகுவதை அனுமதிக்காதீர்கள். இன்னும் கெட்ட நடத்தையுள்ள பள்ளித் தோழர்களின் சகவாசத்திலிருந்தும் அவர்களைத் தடுத்திடுங்கள். அவ்வாறு தடுக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்லாமல் களவில் ஈடுபடுவது, போதை மருந்துப் பழக்கங்கள், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சூதாடுதல், கூடாத இனச்சேர்க்கையில் ஈடுபடுதல் மற்றும் பல சமூக பிரச்னைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு விடுவார்கள்.

இன்னும் வார இறுதி நாட்களில், இஸ்லாத்தின் நெறிமுறைகளைக் கற்றுக் கொடுக்கக் கூடிய முஸ்லிம் ஆசிரியர்களிடம் கல்வி கற்க அனுப்புவது. இன்னும் இதற்காகும் செலவினங்களைக் குறைப்பதற்காக வார இறுதி நாட்களில் நடைமுறையில் இயங்கி வரும் பள்ளிக் கூடங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியின் ஏதாவதொரு அறையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்றால், பள்ளிவாசலின் ஒரு பகுதியை தொழுகை நடைபெறாத நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு நடத்தப்படும் இஸ்லாமிய வகுப்புகளில், இஸ்லாமிய உரைகள், கலந்துரையாடல்கள், புத்தகங்கள் வாசிப்பது, வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் இஸ்லாமிய கல்வியறிவூட்டுவது, இன்னும் கற்பித்தலுக்கான ஏனைய வழிமுறைகளான நூல்கள், மாதாந்திர சஞ்சிகைகள் போன்வற்றை வாங்கி போதிப்பது, மேலும் இன்றைய நவீன மீடியாக்களான ஆடியோ, விடியோ, சிடி, இஸ்லாமிய இணையத்தள நூலகங்கள் போன்றவற்றை பயன்படுத்த கற்றுக் கொடுத்தல் ஆகியவற்றைச் செய்யலாம். இறைவன் வழங்கியிருக்கின் அத்தனை அருட்கொடைகளைக் கொண்டும் அவர்களுக்கு கல்வியைப் போதிப்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிச்சயமாக, மிகப் பெரியோனும், கருணையாளனுமான அல்லாஹ், கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு மிகவும் எளிதாக்கித் தரக் கூடியவனாக இருக்கின்றான். எப்பொழுது முஸ்லிம்களாகிய நாம் மிகச் சரியான வழிமுறையிலமைந்த இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றோமோ, அப்பொழுது இறைவனது அருட்கொடைகள் நம்மை நோக்கி விரைந்து வரக் கூடியதாக இருக்கின்றது. இஸ்லாத்தினை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே படைத்தவனைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும் - அவனை எவ்வாறு வழிபடுவது என்பதனையும், அதன் மூலம் ஈருலகிலும் வெற்றி பெறுவது என்பதனையும் அறிந்து கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும். நமக்கு வழங்கப்பட்டுள்ள பிள்ளைச் செல்வங்கள் பற்றியும் நாம் வினவப்பட இருக்கின்றோம் என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. அவர்களுக்கு நாம் வழங்கக் கூடிய மிகச் சிறந்த அறிவு என்னவென்றால், மிகச் சரியான இஸ்லாமிய அறிவைத் தான். அதனை நம்மால் வழங்க இயலாவிடில், அதற்கான பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது பெற்றோர்களாகிய நம்முடைய பொறுப்பாகும். அதன் மூலம் அவர்களும், நாமும் ஈருலகிலும் வெற்றி பெற்றவர்களாவோம்.
www.tmailislam.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters